சேலத்தில் முதல் முறையாக டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி 5 ஆயிரம் பேர் கண்டு ரசிக்க ஏற்பாடு

சேலத்தில் முதல் முறையாக டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில், 5 ஆயிரம் பேர் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-10 21:19 GMT

சேலம், 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் (டி.என்.பி.எல்.) போட்டிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 6-வது சீசன் போட்டிகள் வருகிற 23-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் கோவை, நெல்லை, திண்டுக்கல் மற்றும் சேலம் ஆகிய மாநகரங்களில் நடைபெற உள்ளது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி, டி.என்.பி.எல். சேர்மன் சிவகுமார், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பிரகாஷ் ஆகியோர் நேற்று இரவு சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சேலத்தில் முதல்முறை

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இதில், சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. டி.என்.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் எவ்வித போட்டிகளும் நடத்தப்படவில்லை. முதல் போட்டி 23-ந்தேதி நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சேலத்தில் முதல் முறையாக டி.என்.பி.எல். போட்டிகள் நடத்தப்படுகின்றன. வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் போட்டிகள் நடைபெறுகிறது. இங்கு அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கின்றன. இதுதவிர 2 தகுதி சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடரின் இறுதி போட்டி கோவையில் அடுத்த மாதம் 31-ந் தேதி நடக்கிறது.

5 ஆயிரம் பேர்

சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் அடுத்த மாதம் 19-ந் தேதி இரவு 7.15 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை எதிர் கொள்கிறது. சேலத்தில் மட்டும் மொத்தம் 9 போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியை சுமார் 5 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. போட்டியை காண டிக்கெட் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இதுபோன்ற டி.என்.பி.எல். போட்டி நடத்தப்படுகிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து 16 வீரர்கள் தேர்வாகி ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். அதன்மூலம் வாசிங்டன் சுந்தர், நடராஜன் உள்ளிட்ட சில வீரர்கள் இந்திய அணிக்கும் தேர்வாகி உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த பேட்டியின்போது, டி.என்.பி.எல். சி.இ.ஓ. பிரசன்னா கண்ணன், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் கிரிக்கெட் அணி கேப்டன் எம்.அஸ்வின், பயிற்சியாளர் பிரசன்னா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்