'பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோரின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - வானதி சீனிவாசன்

தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு ஆவினுக்கான பால் வரத்து பெரும் சரிவை சந்தித்து வருவதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-08-26 17:06 GMT

சென்னை,

பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோரின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்புறங்களில் வசிக்கும் நடுத்தர, ஏழை மக்கள் கறவை மாடுகள் வளர்ப்பை நம்பியே உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும் அதுவே. பெரும்பாலான மக்கள் ஆவினுக்குதான் பால் வழங்கி வருகின்றனர். ஆனால், தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு ஆவினுக்கான பால் வரத்து பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் அதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. தி.மு.க. அரசின் செயலற்ற தன்மை, தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில், பால் முகவர்களுக்கு தினசரி விநியோகிக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகள் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வாய்மொழி உத்தரவு மூலம் இது கோவை மாவட்டம் முழுவதும் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்ட மக்களுக்கு தேவையான பால் கிடைக்காமல் தனியார் பாலை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை ஒன்றியத்தில் இதுவரை தினமும் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது வெறும் 96 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக, பால் முகவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும்போது தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக திட்டமிட்டு, பால் தட்டுப்பாட்டை ஆவின் நிர்வாகம் ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்கவும், மக்களுக்கு ஆவின் பால், தயிர், வெண்ணெய், நெய், பனீர் போன்ற பால் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும் ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சினையில் தலையிட்டு, பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோரின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்