திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறு: ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது
திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை தியாகராயநகரில் உள்ள பாரதிய வித்யாபவனில் 'பாரதியும், விவேகானந்தரும்' என்ற தலைப்பில் கடந்த 11-ந்தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரும், ஆன்மிக பேச்சாளருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன் (வயது 76) கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் தலித் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் அவதூறாகவும் கருத்துகளை தெரிவித்தார். அவருடைய இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவருடைய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
கைது - சிறையில் அடைப்பு
இந்த நிலையில் சென்னை சூளையை சேர்ந்த செல்வம் என்பவர் மணியன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மாம்பலம் போலீசார் அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தியாகராயநகர் உதவி கமிஷனர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார், தியாகராயநகர் ராஜம்மாள் தெருவில் உள்ள மணியன் வீட்டுக்கு நேற்று அதிகாலை சென்றனர். மணியனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மணியன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் சுதாகர், மணியன் மீதான குற்றச்சாட்டுகளை எடுத்துக்கூறினார்.
அதற்கு நீதிபதி (மணியனை பார்த்து), உங்கள் மீதான புகார் குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? என கூறினார்.
அதற்கு மணியன், 'நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது' என்றார். மணியன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ், 'மணியனுக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்' என்றார்.
இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்த நீதிபதி, மணியனை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.