சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.
சங்கரன்கோவில்:
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அங்கூர் விநாயகர் சன்னதியில் வைத்து சுவாமி அம்பாளுக்கு அனுக்ஞை அலங்காரம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 4-ம் திருநாள் அன்று 63 நாயன்மார்களுக்கு சுவாமி அம்பாள் திருக்கயிலாய காட்சி கொடுக்கும் வைபவமும், அதனை தொடர்ந்து 63 நாயன்மார்கள், சுவாமி, அம்பாள் வீதி உலாவும் நடைபெறும்.
5-ம் திருநாள் அன்று சுவாமி அம்பாளுக்கு ஊடல் உற்சவமும், 6-ம் திருநாளான ஜனவரி 2-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 9.20-க்குள் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து கோவிலில் நடராஜர் படிவட்டம் இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
9-ம் திருநாள் அன்று காலை சுவாமி அம்பாள் கோரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய திருவிழாவான ஜனவரி 6-ந்தேதி 10-ம் திருநாள் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் நடக்கிறது.
அன்று அதிகாலை 3 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்் மற்றும் தீபாராதனை, அதனை தொடர்ந்து 4.45 மணிக்கு கோ பூஜையும், 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.
காலை 8.30 மணிக்கு சப்பர தீபாராதனையும், 9 மணிக்கு நடராஜர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.