பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா
திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் தொடங்கியது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் போட்டியை தொடங்கி வைத்தார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் தொடங்கியது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் போட்டியை தொடங்கி வைத்தார்.
கலைத்திருவிழா
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று தொடங்கியது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். க.செல்வராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். போட்டியை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நடனம், இசை, ஓவியம், நாட்டுப்புறக்கலைகள், நவீன கலை வடிவங்களில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 613 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 32 ஆயிரத்து 860 பேர் வெற்றி பெற்றனர். பின்னர் வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் 22 ஆயிரத்து 994 மாணவர்கள் பங்கேற்று 8 ஆயிரத்து 877 பேர் வெற்றி பெற்றனர்.
மாணவ-மாணவிகள்
தற்போது மாவட்ட அளவிலான போட்டிகள் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கி நாளை (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இதில் 6 ஆயிரத்து 801 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
கட்டுரை, பேச்சு, ஓவியம், நடனம், இசைக்கருவிகள் இசைத்தல் போன்ற போட்டிகள் 3 பிரிவுகளாக நடக்கிறது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 33 வகையான போட்டிகளும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 75 வகையான போட்டிகளும், 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 82 வகையான போட்டிகளும் நடைபெற உள்ளது.
வெளிநாட்டுக்கு சுற்றுலா
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன், மாணவிக்கு கலையரசி விருதுகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பாக செயல்படும் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.