திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-21 19:17 GMT

ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பத்தூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நகர செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார். வாணியம்பாடி தொகுதி ஜி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

விலைவாசி உயர்வு

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்துள்ளார். அப்போது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக அப்போது தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறை அவரை கைது செய்து உள்ளது. நெஞ்சு வலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை சரியில்லை என அமைச்சர் வேறு மருத்துவமனைக்கு செல்வதால் தமிழக அரசின் சுகாதாரத்துறை எவ்வாறு செயல்படுவது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றால் தமிழக மக்கள் தத்தளிக்கிறார்கள்.

நீக்க வேண்டும்

பால் விலை, பஸ் கட்டணம் அனைத்தும் உயர்ந்துள்ளது. தி.மு.க. அரசால் எந்த புதிய திட்டங்களையும் கொண்டு வர முடியவில்லை. அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரித்தல் அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்பதால் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி என நாடகம் ஆடுகிறார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடந்தபோது நாங்கள் எல்லாம் முழு ஒத்துழைப்பு தந்தோம். தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும், வாகனங்கள் மீதும் தி.மு.க. தாக்குதல் நடத்தி உள்ளது.

எனவே உடனடியாக செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்டன கோஷத்தை நகராட்சி கவுன்சிலர் டி.டி.சங்கர் வாசித்தார். இதில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியும், விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் டாக்டர் லீலா சுப்பிரமணியம், இணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், நகர துணை செயலாளர் ஏ.ஆனந்தன், ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.திருப்பதி சி.செல்வம், மாவட்ட பிரதிநிதி டி.எம்.ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வி.பெருமாள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரா.ரமேஷ், பேரவை ஒன்றிய செயலாளர் ஆர்.ஆறுமுகம், தம்பா கிருஷ்ணன், சோடா வாசு, நகராட்சி கவுன்சிலர் எஸ்.எம்.எஸ்.சதீஷ், ஆனந்தபிரபு, பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்