திருப்பரங்குன்றம் கோவில் தூண் சிற்பங்கள் தூய்மைப்படுத்தும் பணி - சந்தனம், குங்குமம் பூசுவதை பக்தர்கள் தவிர்க்க வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் கோவிலில் தூண் சிற்பங்கள் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. சந்தனம், குங்குமத்தை பூசுவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-01-23 20:46 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் கோவிலில் தூண் சிற்பங்கள் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. சந்தனம், குங்குமத்தை பூசுவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தூய்மைப்படுத்தும் பணி

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தின் தூண்களில் மீனாட்சி அம்மனின் திக்விஜயம், ஹயக்ரீவர், நரசிம்மர், ஆஞ்சநேயர், மன்மதன், ஆலவாய் அன்னல், வராகிஅம்மன் என்று பல்வேறு தெய்வீக சிற்ப சிலைகள் உள்ளன. ஒவ்வொரு சிலையும் ஒரு கிழமையில் வழிபடக்கூடிய வகையில் அமைந்து உள்ளது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்பங்களுக்கு குங்குமம், சந்தனத்தை தடவி தங்களது பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

அதை ஒருபுறம் வரவேற்றாலும், புராணகாலத்தின் வரலாற்றை உணர்த்தும் சிற்பங்களின் அழகுதன்மையும், சிறப்பும் கொஞ்சம், கொஞ்சமாக மங்கிவிடுகிறது. நாளடைவில் தூணும், சிற்பங்களும் சிதலமடைய கூடும். இதனையொட்டி அவ்வப்போது கோவில் நிர்வாகம் சிற்பங்களில் அழுக்கு, மாசு மற்றும் சந்தன பூச்சை தேய்த்து மெருகியேற்றி வருகிறார்கள்.

வலியுறுத்தல்

அதேபோல நேற்றுகோவில் துணை கமிஷனர் சுரேஷ் உத்தரவின்பேரில் தூணில் உள்ள சிலைகள் யாவும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மேலும் கோவில் தூணில் உள்ள சிற்பங்களை பாதுகாப்பதில் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். பக்தர்கள் குங்குமம், சந்தனத்தை சிற்ப சிலைகளில் பூசாமல் இருக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்