திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: கிரிவலப்பாதையில் கோலாகல தேரோட்டம் -பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-09 19:41 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் 12 மாதமும் திருவிழா நடைபெறும். அதில் பங்குனி பெருவிழா முக்கியமானது. 15 நாட்கள் விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 5.30 மணி அளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். தீபாராதனை நடந்தது. அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க கருப்பணசுவாமி சன்னதி முன்பு எழுந்தருளினர். அங்கு கருப்பணசுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து தேரில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கிரிவலப்பாதையில் வந்த தேர்

இதனை தொடர்ந்து கோவில் முதல் ஸ்தானிகர் மு.சுவாமிநாதன் பட்டர் வெள்ளை வீசினார். உடனே அங்கு கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி தேர் இழுத்தனர். பெண் பக்தர்கள் விநாயகர் எழுந்தருளிய சட்ட தேரை இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்தபடி, கிரிவலப்பாதையில் தேர்கள் ஒன்றின்பின் ஒன்றாக வலம் வந்தன.

திருப்பரங்குன்றம் மலையை சுற்றி தேரோட்டம் நடந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கோவில் வாசல் அருகே தேர் வந்ததும் பக்தர்கள் உற்சாகத்துடன் 4 வடங்களையும் தலைக்கு மேல் தூக்கி பக்தி கோஷமிட்டனர்.

நேர்த்திக்கடன்

3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையை சுமார் 5 மணி நேரத்தில் தேர் வலம் வந்தது. காலை 10.45 மணிக்கு நிலையை அடைந்தது. உடனே பக்தர்கள் வாழை பழங்களை சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைவிட இம்முறை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) தீர்த்த உற்சவம் நடக்கிறது.

தேரோட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, ராஜன்செல்லப்பா, அ.தி.மு.க. எம்..ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், முன்னாள் அறங்காவலர் கோ.பாரி, தொழில் அதிபர்கள் ஆர்.கண்ணன், மு.கண்ணன், சமூக ஆர்வலர் வ.சண்முகசுந்தரம், .திருநகர் முருக பக்தர்கள் திருப்பணிக்குழு நிர்வாகிகள் ராஜபூரண சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் உசிலை சிவா, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் தனக்கன்குளம் எம்.பி.எஸ்.பழனிக்குமார், காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் சி.மணவாளன், ஆ.முத்துக்குமார், கே.தீபக் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்