திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா - 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா வருகின்ற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ெதப்பத்திருவிழா வருகின்ற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
தெப்பத்திருவிழா
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். தெப்பத்திருவிழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக தை கார்த்திகை அன்று தெப்பம் தள்ளுதல், தேரோட்டம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப மிதவையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளுவார். அங்கு காலை, இரவில் தெப்ப மிதவையில் இணைக்கப்படும் வடத்தினை பிடித்து தெப்பக்குளத்தினை 3 முறை சுற்றி வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தெப்பத்திருவிழா தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 30-ந்தேதி தேரோட்டமும், சிகர நிகழ்ச்சியாக 31-ந்தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
தண்ணீர் நிரப்புதல்
திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டின் ஓரத்தில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது. இருப்பினும் தெப்ப மிதவை வலம் வருவதற்கு வசதியாக கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால் தெப்பக்குளம் மேல்புறத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டாரை இயக்கி அதன்மூலம் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.