திருச்செந்தூர்வைகாசி விசாக திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு நடத்தினார்.

Update: 2023-06-01 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு செய்தார்.

வைகாசி விசாக திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டு, 20 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 650-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆய்வு

இந்நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கோவில் வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரை பகுதிகள் மற்றும் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மாயவன், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள், திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்