திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

Update: 2023-02-02 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணணம் உள்ளனர்.

தைப்பூச திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

அதிகாலை 4.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை நடைபெறுகிறது.

அலைவாயுகந்த பெருமான் வீதி உலா

தொடர்ந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று மீண்டும் கோவிலை சேர்கிறார்.

மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜைக்கு பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படுகிறது.

சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த தினம்

சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த தினமான இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறுகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

-----

Tags:    

மேலும் செய்திகள்