திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு பாதிக்கப்பட்டுள்ள மாணவன் குடும்பத்தினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் நேற்று உதவி கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பழங்குடியினர் சாதி சான்றிதழ்
திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தை சேர்ந்த மாணவன் பூவலிங்கம். தற்போது பிளஸ்-2 வகுப்பு முடித்த நிலையில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு போராடி வருகிறார். சாதி சான்றிதழ் இல்லாததால் உயர் கல்வியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.
இதையடுத்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாணவனின் குடும்பத்தினர், உறவினர்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவனுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது வரை மாணவனுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.
முற்றுகை போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் குடும்பத்தினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் நேற்று மாலையில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அந்த அலுவலகத்தை திடீரென தரையில் அமர்ந்தவாறு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் அருகே சுனாமி நகர் பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 3 குடும்பத்தினர். அவர்களுடைய குழந்தைகளை பள்ளியில் படிக்க சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகிறது என கூறி அவர்களும் சாதி சான்றிதழ் கேட்டு உதவி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தனர். அவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
அதிகாரிகள் உறுதி
இதை தொடர்ந்து பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு இன்று (சனிக்கிழமை) நேரில் விசாரணை நடத்தி உரிய சாதி சான்றிதழ் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.