திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில்உண்டியல் காணிக்கை ரூ.3.12 கோடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.12 கோடி கிடைத்துள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூ.3.12 கோடியும், 1¾ கிலோ தங்கமும் கிடைத்தது.
உண்டியல் காணிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணம் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முதல் முறையாக கோவில் வளாகத்தில் உள்ள காவடி மண்டபத்தில் நடைபெற்றது.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் தலைமையில், இணை ஆணையாளர் கார்த்திக், அறங்காவலர்கள் ராம்தாஸ், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில் இந்த பணி நடந்தது.
ரூ.3.12 கோடி
பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 12 லட்சத்து 84 ஆயிரத்து 617 கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1 கிலோ 780 கிராமும், வெள்ளி 38 கிலோ 109 கிராமும், 292 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
காணிக்கை எண்ணும் பணியில் தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், ஆய்வர்கள் செந்தில்நாயகி, பகவதி, அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.