திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது

திருச்செந்தூரில் யாகசாலை பூஜையுடன் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர்.

Update: 2022-10-25 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர்.

கந்தசஷ்டி திருவிழா

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ெதாடர்ந்து விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, காலசந்தி தீபாராதனை நடந்தது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் யாகசாலைக்கு எழுந்தருளினார். யாகசாலையில் பிரதான மூன்று கும்பங்களான சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாள் மற்றும் சிவன், பார்வதி உள்பட பரிவார மூர்த்தி கும்பங்கள் என பல்வேறு கும்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

யாகசாலை பூஜை

ெதாடர்ந்து இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர் கணேசன் ஆகியோரிடம் காப்பு கட்டிய முத்துகுமாரசாமி பட்டர் தாம்பூலம் பெற்று யாகசாலை பூஜையை தொடங்கினார்.

யாகசாலையில், விக்னேசுவர பூஜை, பூத சுத்தி, கும்ப பூஜை, ஹோம பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால பூஜை நடந்த பின் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு உச்சிகால பூஜை நடந்தது.

தங்கத்தேரில் சுவாமி

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபத்திற்கு வந்தார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதற்கிடையே சூரிய கிரகணத்தை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. பின்னர் 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன. இரவு 7 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தங்கத்தேரில் ஏற்பட்ட சில பழுது காரணமாக கடந்த 7 மாதமாக கிரி வீதியில் உலா வருவது நிறுத்தி வைக்கப்பட்டது. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு தங்கத்தேர் சரிசெய்யப்பட்டு நேற்று இரவு கிரி வீதியில் உலா வந்தது.

அங்கபிரதட்சணம்

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி காவி, பச்சை நிற ஆடை அணிந்து கோவில் கிரி பிரகாரத்தில் அங்க பிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர். பெரும்பாலான பெண்கள் கிரி பிரகாரத்தில் அடிபிரதட்சணம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சி 6-ம் நாளான வருகிற 30-ந் தேி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கடற்கரையில் நடக்கிறது.

31-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடக்கின்றது.

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்