திருச்செந்தூர் அமலிநகரில் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை:மீனவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்

திருச்செந்தூர் அமலிநகரில் 5-வது நாளாக கடலுக்கு செல்லாமல் வெள்ளிக்கிழமை மீனவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2023-08-11 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி நேற்று 5-வது நாளாக கடலுக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தூண்டில் வளைவு பாலம்

திருச்செந்தூர் அமலிநகரில் மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு கடந்த 2022-ம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கடந்த 7-ந் தேதி முதல் அமலிநகர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதம்

இந்நிலையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி 5-வது நாளான நேற்று அமலி அன்னை ஆலயம் முன்பு மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமலிநகரிலுள்ள அனைத்து மீனவ குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

தங்களின் கோரிக்கையான தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி தொடங்கும் வரை போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மீனவர்களின் இந்த தொடர் போராட்டத்தால் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்