கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள்
கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து மருத்துவர், பொதுமக்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது, அனல் காற்று வீசுகிறது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்துக்கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடுசெய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.
கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-
உடல் உஷ்ணத்தை தணிக்கும்
விழுப்புரம் அரசு மருத்துவமனை உதவி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ஷகிலா:-
கோடை காலம் வந்துவிட்டாலே பொதுமக்கள் தோல்நோய், அதிவியர்வை, சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவருகிறது. இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், கோடை வெப்பத்தை சமாளிக்கவும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் கருதி பொதுமக்கள் அனைவரும் அதிகளவில் குடிதண்ணீர் குடிக்க வேண்டும். அதில் வெட்டிவேர், நெல்லிவற்றல், நன்னாரிவேர், பதிமுகம் (தாகமுக்தி), சீரகம் இதில் ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு நாளும் போட்டு குடித்தால் சிறந்தது. வேலைக்கு செல்பவர்கள் சிரமம் பார்க்காமல் வீட்டிலிருந்தே 2 பாட்டில்களில் குடிதண்ணீர் எடுத்துச்செல்லுதல் வேண்டும். நாம் எந்தளவிற்கு அதிகளவில் குடிதண்ணீர் குடிக்கிறோமோ அந்தளவிற்கு வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். அதுபோல் நீரை விட்டு மோர் பெருக்கு என்னும் பழமொழிக்கேற்ப மோரை நீர்விட்டு தனியாகவோ அல்லது தினமும் உணவிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் 7 முறை கழுவிய கற்றாழையுடன் சேர்த்த மோரை குடித்தால் மிகவும் நல்லது, அது உடல் உஷ்ணத்தை பெருமளவில் தணிக்கும்.
நீர்ச்சத்து, உப்புச்சத்து குறையும்
மேலும் நாம் அத்தியாவசிய தேவைக்காகவோ, வேலை விஷயமாகவோ வெளியே செல்வதால் உடலில் நீர்ச்சத்து, உப்புச்சத்து குறைய வாய்ப்புள்ளது. எனவே வெப்பத்தை தணிக்கும் வகையில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். அதில் உப்பு, சர்க்கரை, சப்ஜா விதை சேர்த்து குடித்தால் சிறந்தது. அதுமட்டுமின்றி நன்னாரி சர்பத், நுங்கு, இளநீர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், பழைய சாதம் மற்றும் கோடை கால சீசன் பழங்களான வெள்ளரிப்பழம், தர்பூசணி, முலாம் பழம் ஆகியவற்றை சாப்பிட்டும் வெப்பத்தை தணிக்கலாம். மிக முக்கியமாக இந்த சமயத்தில் அதிக காரம், மசாலா, துரித உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் தினமும் 2 வேளை வெட்டிவேர், நலுங்குமாவு தேய்த்து குளிக்க வேண்டும். தண்ணீரில் நலுங்குமாவு கலந்து குளிப்பதன் மூலம் வியர்வை துர்நாற்றம் வராது. அதுபோல் வாரம் 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து தலைகுளிக்கவும். சிலர் கணினி முன்பு உட்கார்ந்து வேலை செய்பவர்கள் என்றால் அவர்களுக்கு இந்தநேரத்தில் கண் எரிச்சல் ஏற்படும். அவ்வாறு கண் எரிச்சல் உள்ளவர்கள், இரவில் தூங்குவதற்கு முன்பு பாதத்தில் பசுநெய் பூசிக்கொண்டு தூங்கினால் கண் எரிச்சல் இருக்காது. தற்போது பலரும் கோடை காலத்தை மகிழ்ச்சியாக கொண்டாட வெளியூர்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் இயற்கை உணவுகளையும், பாதுகாப்பான உணவுகளையும் எடுத்துக்கொள்வது அவசியம்.
வெளியில் செல்வதை தவிருங்கள்
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதுநிலை உதவி பேராசிரியர் டாக்டர் அம்பேத்கர்:-
கோடை காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த சமயங்களில் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் ஏற்படுவதால் நீரின் மூலம் பரவும் வியாதிகளான வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. அவற்றை குறைப்பதற்கு நீர்சத்து நிறைந்த உணவுகளான பழச்சாறு, இளநீர், தயிர், மோர் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். நாம் அன்றாட நாட்களில் தேவைப்படும் நீரின் அளவை விட கோடை காலங்களில் அதிகம் தேவைப்படுகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். கோடை காலங்களில் ஏற்படும் வியர்குரு போன்றவைகளை தவிர்க்க காலை, மாலை என இருவேளைகளும் நன்கு குளிக்க வேண்டும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் நேரங்களான காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெரும்பாலும் வெளியில் செல்வதை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலை இருப்பின் குடைகளை பயன்படுத்தி வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
கோடை வெயிலை சமாளிக்கலாம்
மேல்மலையனூர் அருகே பெருவளூரை சேர்ந்த கோமதி:-
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால் உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாக வெளியேறி விடுகிறது. இதனால் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உடல்சூடு ஏற்படுவதுடன் நீர்கடுப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே இதை சமாளிக்க தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து பருகுவதைவிட மண்பானைகளில் இருந்து தண்ணீர் பருகுவதே சிறந்தது. கோடைகாலத்தில் இறைவனின் படைப்பாக கிடைக்கும் வெள்ளரிப்பழம், தர்பூசணிப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, நுங்கு போன்ற நீர்ச்சத்துள்ளவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றை ஜூசாக பருகுவதைவிட அப்படியே சாப்பிட வேண்டும். அப்போதுதான் சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். இவற்றையெல்லாம் கடைபிடித்தால் கோடை வெயிலை எளிதில் சமாளிக்கலாம்.
குடை, தொப்பி அவசியம்
திண்டிவனம் சமூக ஆர்வலர் பிரபு:-
கடந்த காலங்களைவிட வெயிலின் தாக்கம் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வசதி படைத்தவர்கள் பழ வகைகள், பழச்சாறுகள், குளிர்பானங்கள், குளிர்சாதன வசதியுடன் ஓரளவுக்கு வெப்பத்தை சமாளித்து வருகிறார்கள். ஏழை, எளியவர்களின் பாடு திண்டாட்டம்தான். காரணம், அவர்கள் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தாலும் உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் உள்ளனர். ஏழை, எளியவர்கள் இந்த வெயிலின் தாக்கத்தை குறைந்த செலவில் ஓரளவுக்கு தவிர்த்துக்கொள்ள இயற்கை தந்த வரப்பிரசாதமான ஒரு சில யோசனைகள், ஏழையின் கனி எலுமிச்சை பழத்தை சாதாரணமாக பிழிந்து உப்பு சேர்த்தும் அல்லது சர்க்கரை சேர்த்தும் குடிக்கலாம். இதேபோல் கடைகளில் தற்போது 10 ரூபாய்க்கு தயிர் கிடைப்பதை வாங்கி அதிகளவில் தண்ணீர் கலந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குடித்தால் வெயிலின் தாக்கத்தால் உருவாகும் பிரச்சினைகள் குறையும். உணவில் குளிர்ச்சியான காய்கறிகளையும், கீரை வகைகளையும் சேர்த்துக்கொண்டால் உடல் உஷ்ணமாவதை தவிர்க்கலாம். வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், தர்பூசணி போன்றவற்றை பயன்படுத்தி கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கலாம். வெயிலில் வெளியே செல்லும்போது குடை அல்லது தொப்பியை அணிந்து கொள்வது நல்லது.
வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர்.பொன்னரசு:-
தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது.இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பருத்தியால் ஆன வெள்ளை நிற ஆடை அணிவது நல்லது. கருப்பு நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும். காலை 11.30 முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். அதேபோல் டீ காபி சாப்பிடுவதை தவிர்த்து எலுமிச்சை சாறு, மோர், இளநீர் அருந்துவது நல்லது. அதேபோல் நுங்கு, அத்திப்பழம், வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றை சாப்பிடலாம். வாழைத்தண்டு, வெள்ளை பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெந்தயக்கீரை போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். காலையில் கேழ்வரகு, கம்பு, சோளம் கூழ்களை நீர் ஆதாரமாக அருந்தலாம். தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது உடம்பிற்கு நல்லது. கோடை காலத்தில் சிலர் நீச்சல் குளம் சென்று குளிப்பார்கள். அவ்வாறு குளிக்கும்போது சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படும் நீச்சல் குளத்தில் மட்டுமே குளிக்க வேண்டும். இல்லை என்றால் கண், காது சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். தினமும் 3 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். வெளியில் செல்லும்போது உப்பு கரைசல் நீர் எடுத்துச் செல்வது நல்லது.