அரளைக்கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல்
அரளைக்கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தோகைமலையில் உள்ள பாளையம் மெயின் ரோட்டில் குளித்தலை தாசில்தார் மகுடேஸ்வரன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரியை வருவாய் துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த டிப்பர் லாரி நிற்காமல் சென்றது. இதையடுத்து, வருவாய் துறையினர் அந்த டிப்பர் லாரியை தங்களது வாகனத்தில் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த டிப்பர் லாரியில் சோதனை மேற்கொண்டபோது அதில் உரிய அனுமதி இன்றி அரளைக்கற்களை கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் டிரைவர் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தோகைமலை போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் சங்ககவண்டம்பட்டியை சேர்ந்த சக்திவேலை (42) கைது செய்தார்.