பெண் உறுப்பினர்கள் பேச நேரம் ஒதுக்க வேண்டும் திருமருகல் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
பெண் உறுப்பினர்கள் பேச நேரம் ஒதுக்க வேண்டும் என திருமருகல் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெண் உறுப்பினர்கள் பேச நேரம் ஒதுக்க வேண்டும் என திருமருகல் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-
இளஞ்செழியன்(தி.மு.க.):-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். திருமருகல் ஒன்றிய பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. முழுமையாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய பாலம் கட்ட வேண்டும்
மணிவண்ணன் (தி.மு.க.):-
ஒன்றியத்தில் இடிக்கப்பட்ட பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பயத்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். வளப்பாற்றில் பில்லாளி ஊராட்சி மத்தளங்குடி, கீழத்தஞ்சாவூர் ஊராட்சியில் புதிய பாலம் கட்ட வேண்டும்.
இந்திராஅருள்மணி (அ.தி. மு.க.):- ஒன்றியக்குழு கூட்டத்தில் பெண் உறுப்பினர்களுக்கு குறை, நிறைகள் பற்றி பேச வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. எனவே பெண் உறுப்பினர்கள் குறை நிறைகளை பற்றி பேச நேரம் ஒதுக்க வேண்டும்.
மின்சாரம் சரிவர வழங்கவில்லை
சரவணன் (தி.மு.க.):- திருமருகல் ஒன்றிய பகுதியில் ஒப்பந்த பணிகள் முழுவதும் முடிக்கப்பட்ட நிலையில் அதற்கான தொகை ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்படாமல் உள்ளது.
வினோதினி கார்த்திக் (தி.மு.க.):- பனங்குடி பகுதியில் சனிக்கிழமைகளில் பராமரிப்பு பணிகள் செய்தும் மின்சாரம் சரிவர வழங்கப்படுவதில்லை.
அபிநயா அருண்குமார் (தி.மு.க.):- திருக்கண்ணபுரத்தில் சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்ற புதிய மின்கம்பம் இறக்கப்பட்டும் இன்றுவரை மாற்றப்படாமல் உள்ளது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் நன்றி கூறினார்.