மீண்டும் விறகு அடுப்பிற்கு செல்ல வேண்டிய நிலை

சமையல் கியாஸ் விலை உயர்வினால் மீண்டும் விறகு அடுப்பிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இல்லத்தரசிகள் கூறினர்.

Update: 2022-07-06 20:41 GMT

வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நேற்று மீண்டும் உயர்ந்து இருக்கிறது. இது இல்லத்தரசிகளுக்கு வேதனையை தருகிறது. சிலிண்டர் விலை உயர்வு குறித்து விருதுநகர் மாவட்ட இல்லத்தரசிகள் கூறியதாவது:-

விலை உயர்வு

ராஜலட்சுமி:- சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆயிரத்தை தாண்டி சிலிண்டர் விலை உயர்ந்து விட்ட இந்த தருணத்தில் தற்போது மீண்டும் உயர்ந்து இருப்பது எங்களுக்கு பெரிய அதிர்ச்சிைய ஏற்படுத்தி உள்ளது. சிலிண்டர் விலையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விறகு அடுப்பு

தேவி:- தற்போது கியாஸ் விலை என்பது விண்ணைத் தொடும் அளவிற்கு அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களிடம் மிகவும் அதிர்ச்சியையும் மனவேதனையும் ஏற்படுத்தி உள்ளது. விலை உயர்வு என்பது உயர்ந்து கொண்டே சென்றாலும் அன்றாட சாமானிய மக்களின் சம்பளமானது அதே நிலையில் தான் இருக்கின்றது.

இந்நிலையில் அன்றாட கூலி வேலை செய்யும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. ஆதலால் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகி உள்ளோம்.

பொதுமக்களுக்கு சிரமம்

ராஜாத்தி:- காரியாபட்டி பகுதி முழுவதும் கிராம பகுதிகளை கொண்டுள்ளது. இந்த பகுதி மக்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அடிக்கடி கியாஸ் சிலின்டர் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. தற்போது ரூ. 50 விலை உயர்ந்துள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும்.

வேலைவாய்ப்பு

முத்தம்மாள்:- வேலைவாய்ப்பு சரியாக இல்லாததால் குறைவான சம்பளத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். தற்போது சிலிண்டர் விலை உயர்வினால் வீட்டுச் செலவை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனில் விறகு அடுப்புக்கு மாற வேண்டிய நிலை கண்டிப்பாக வந்து விடும்.

ஏற்கனவே கியாஸ் சிலிண்டர் ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஒரு பக்கம் நெருக்கடியை கொடுத்து வரும் சிலிண்டர் விலை உயர்வு மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதே நிலை நீடித்தால் நடுத்தர மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்.

முற்றுப்புள்ளி

முனீஸ்வரி:- சிலிண்டர் விலை உயர்வால் நடுத்தர, ஏழை குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அடிக்கடி சிலிண்டர் விலையை கூட்டுவது என்பது வாடிக்கையாக நடந்து வருவதால் எங்கள் பகுதியில் 2 சிலிண்டர்களை பயன்படுத்தி வந்த குடும்பங்கள் தற்போது ஒரு சிலிண்டர் தான் பயன்படுத்தி வருகிறது. மீண்டும் மீண்டும் விலையை உயர்த்திக்கொண்டே போவதால் இனிமேல் இந்த ஒரு சிலிண்டரையும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு பழைய முறைப்படி விறகு அடுப்பில் சமைக்க வேண்டியது தான். மத்திய, மாநில அரசுகள் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிலிண்டர் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்