தேனி அரசு மருத்துவமனையில் திடீரென்று பெயர்ந்த டைல்ஸ் கற்கள்; நோயாளிகள் அச்சம்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீரென்று தரையின் டைல்ஸ் கற்கள் பெயர்ந்ததால் நோயாளிகள் அச்சமடைந்தனர்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 1,000-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் 2-வது தளத்தில் உள்ள 704-வது வார்டில் 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நோயாளிகள் தங்கி உள்ளனர். இந்தநிலையில் அந்த வார்டின் தரையில் பதிக்கப்பட்டு இருந்த டைல்ஸ் கற்கள் இன்று திடீரென்று ஒவ்வொன்றாக வெடித்து பெயர்ந்தது. இதனைக்கண்ட நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் நர்சுகள் என அனைவரும் கட்டிடமே இடிய போகிறதோ என்று அச்சமடைந்து வார்டைவிட்டு வெளியேறினர்.
பின்னர் இதுகுறித்து, தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் வார்டு பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்களுக்குள் தண்ணீரும், காற்றும் புகுந்ததாலும், அதன்மீது மக்கள் நடந்து செல்லும்போது ஏற்பட்ட அழுத்தத்தினாலும் கற்கள் பெயர்ந்தது. இதனால் வேறு எதுவும் பாதிப்பு இல்லை என்று தீயணைப்பு படையினர் கூறினர். அதன்பிறகே வார்டில் இருந்த நோயாளிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இதையடுத்து பெயர்ந்த டைல்ஸ் கற்கள் உடனடியாக அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தால் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.