கொலை வழக்கு விசாரணை: திகார் ஜெயில் கைதி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்

கொலை வழக்கு விசாரணைக்காக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2022-10-27 18:25 GMT

நாகர்கோவில், 

கொலை வழக்கு விசாரணைக்காக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வாலிபர் கொலை

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் வாசிம் என்ற முன்னா என்ற ரபீக் (வயது 34), செய்யது அலி (30). இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த 2010-ம் ஆண்டு நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்து இவர்கள் தொழில் செய்து வந்தனர்.

இந்த நிலையில் முன்னாவுக்கும், செய்யது அலிக்கும் தொழிலில் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று விடுதியில் வைத்து இருவருக்கும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முன்னா கத்தியால் செய்யதுஅலியை குத்தி கொலை செய்தார்.

தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

பின்னர் முன்னா அங்கிருந்து தப்பிஓடி தலைமறைவானார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முன்னாவை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார். இதற்கிடையே டெல்லியில் நடந்த ஒரு கொலை வழக்கில் முன்னாவை டெல்லி போலீசார் கைது செய்தனர். அப்போது தான் அவருக்கு நாகர்கோவில் கொலை வழக்கிலும் தொடர்பு உள்ளது டெல்லி போலீசாருக்கு தெரியவந்தது.

பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்த நாகர்கோவில் கோட்டார் போலீசார் கொலை வழக்கு தொடர்பாக முன்னாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் முன்னாைவ கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மீண்டும் கோர்ட்டில் ஆஜர்

விசாரணைக்கு பிறகு முன்னா மீண்டும் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தநிலையில் நாகர்கோவிலில் நடந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை நேற்று கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்தது. இதற்காக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த முன்னாவை டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது கோட்டார் போலீசார் முன்னாவை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அப்போது விசாரணை வருகிற 11-ந் தேதி அன்று நடைபெறும் என்றும் அன்றையதினம் முன்னாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முன்னா பாளையங்கோட்டை சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டார்.

முன்னா மீது டெல்லி, அரியானா, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, அடிதடி, துப்பாக்கி சூடு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மேலும் போலீசாரின் பிரபல ரவுடி பட்டியலில் முன்னா இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்