ரேஷன் அரிசி கடத்திய 132 பேர் மீது குண்டர் சட்டம்

ரேஷன் அரிசி கடத்திய 132 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் துறை முதன்மை செயலர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறினார்.

Update: 2023-01-27 19:06 GMT

திருப்பரங்குன்றம், 

ரேஷன் அரிசி கடத்திய 132 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் துறை முதன்மை செயலர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறினார்.

விவசாயிகளுக்கு கடன்

திருப்பரங்குன்றத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூட்டுறவு துறை மூலம் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டிலும் 10 ஆயிரம் கோடியை தாண்டி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 14 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.10.892 கோடிகடன் வழங்க வாய்ப்பு கிடைத்தது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச்-ல் சம்பா சீசன் வருகிறது. 3594 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே 1,367 நெல் கொள்முதல்நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது நாள் ஒன்றுக்கு 17 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில நாட்களில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலை எதிர்பார்க்கிறோம். ரேஷன் கடைகளை புதுப்பிக்க முதல்-அமைச்சர் கூறி உள்ளார். 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. அதில் 25 ஆயிரம் நிரந்தர கடைகளும், 10 ஆயிரம் பகுதிநேர கடைகளாகவும் செயல்பட்டு வருகிறது. நம்ம ஊரு நம்ம ரேஷன் கடை திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 4 ஆயிரத்து 845 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தல்

தமிழகத்தில் கடுமைப்படுத்தப்பட்டதால்தான் ரேஷன் அரிசி கடத்தல் என்ற செய்தி வருகிறது. இதுவரை ரேஷன் அரிசி கடத்திய 132 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடோனிலும் கண்காணிப்புகேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 5 ஆயிரம் கேமரா வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பெரும்பாலும் தரமான அரிசி வழங்கப்படுகிறது. பொங்கலுக்குகூட நல்ல அரிசி வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் குற்றச்சாட்டு வந்தால் உரிய பொருளை திரும்பி அனுப்புங்கள். தரமான நல்ல அரிசி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்