ஊராட்சி செயலாளர்கள் 3 நாள் விடுப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் 3 நாள் விடுப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளனர். இதனால் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விடுப்பு கடிதம் வழங்கினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் 3 நாள் விடுப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளனர். இதனால் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விடுப்பு கடிதம் வழங்கினர்.
விடுப்பு எடுக்கும் போராட்டம்
தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளன. அங்கு பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு பணி நெருக்கடியை தவிர்க்க வேண்டும். ஊராட்சி செயலாளா்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். புதிய பணி விதிகள் அரசாணையை வெளியிட வேண்டும். ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்.ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை 3 நாட்கள் ஊதியம் இல்லா விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
விடுப்பு கடிதம்
இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 3 நாள் விடுப்பு கடிதத்தை மாவட்ட தலைவர் தங்கதுரை தலைமையில் மாநில துணைத்தலைவர் கருணாநிதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரிடம் வழங்கினர்.3 நாள் விடுப்பு போராட்டத்தினால் ஊராட்சி பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.