துப்பாக்கியை காட்டி மிரட்டல்; வாலிபர் கைது
கார் நிறுத்துவதற்கு இடையூறு செய்தவர்களை பலூன் சுடும் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கார் நிறுத்துவதற்கு இடையூறு செய்தவர்களை பலூன் சுடும் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கார் நிறுத்துவதற்கு இடையூறு
மதுரை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் மித்ரன் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இவர் புதூரில் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் காரில் தனது அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அலுவலகத்திற்கு முன்பு ஆட்டோ ஒன்று வழியை மறைத்து நின்றதால் காரை உள்ளே எடுத்து செல்ல முடியவில்லை.
மேலும் ஆட்டோ டிரைவர் வண்டியை எடுக்காமல் இருந்ததால் மித்ரன் அவரை சத்தம் போட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் ஆட்டோ டிரைவருக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மித்ரன் வீட்டிற்கு சென்று துப்பாக்கியை எடுத்து வந்து தன்னிடம் தகராறு செய்தவர்களை அதனை காட்டி மிரட்டினார்.
துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் கைது
இது குறித்து அங்கிருந்தவர்கள் புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மித்ரனை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் வைத்திருந்தது பலூன் சுடும் துப்பாக்கி என்பதும், அவர் மனஅழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்து மித்ரனை கைது செய்தனர்.