சிறையில் உள்ள கணித ஆசிரியையின் உயிருக்கு அச்சுறுத்தல்

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கணித ஆசிரியையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவரை வேறு சிறைக்கு மாற்றக்கோரி கோர்ட்டில் தந்தை மனுதாக்கல் செய்துள்ளார்.

Update: 2022-08-10 18:00 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், கணித ஆசிரியை கீர்த்திகா, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் தற்போது சேலம் சிறையில் உள்ளனர். இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நேற்று விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கணித ஆசிரியை கீர்த்திகாவின் தந்தை ஜெயராஜ் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பள்ளி தாளாளர், செயலாளர் ஆகியோருடன் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகளான கீர்த்திகாவிற்கு சிறையிலேயே பள்ளி நிர்வாகிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகள் கீர்த்திகாவை திருச்சி சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சாந்தி, இம்மனுவின் மீதான விசாரணையை பிறகு மேற்கொள்வதாக தெரிவித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்