கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் கேட்ட வாலிபர் மீது வழக்கு
போடியில் கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் கேட்ட வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி அரண்மனை தெருவை சேர்ந்தவர் பாண்டி மகேந்திரன் (வயது 33). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் காலை இவர், போடி சாலை காளியம்மன் கோவில் அருகே நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போடி சர்ச் தெருவைச் சேர்ந்த மருதுபாண்டி (31) என்பவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் தரமறுத்து சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டதுடன் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை கண்டதும் மருதுபாண்டி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து பாண்டி மகேந்திரன் போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மருதுபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.