கண்மாயில் இறங்கி ஆயிரக்கணக்கானோர் மீன்களை அள்ளினர்

மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளினர்.

Update: 2022-06-20 17:04 GMT

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் பாரம்பரிய மீன்பிடி திருவிழாவிற்கு புகழ்பெற்றதாகும். கோடைகால முடிவில் இந்த மாவட்ட கிராமங்களில் அழிகண்மாய் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த பாரம்பரிய விழா தற்போது மீன்பிடித்திருவிழாவாக மாறியுள்ளது.

திருப்பத்தூர் அருகே துவார் கிராமத்தில் வள்ளிலிங்கம் கோவில் அருகில் வள்ளிகண்மாயில் மீன்பிடித் திருவிழா நேற்று காலை நடைபெற்றது.

இதையொட்டி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடி வள்ளிலிங்கசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தினர்.

அதன்பிறகு காலை 6 மணிக்கு அம்பலக்காரர் சங்கர் சின்னம்பலம் செந்தில்குமார், மற்றும் ஊர் கமிட்டியினர் வெள்ளைதுண்டு வீச கண்மாயைச் சுற்றி திரண்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்மாயில் இறங்கி மீன்பிடிக்க ஆரம்பித்தனர். இதில் வலை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

4 ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற்ற விழா என்பதால் பிடிபட்ட கட்லா மீன்கள் 3 கிலோ முதல் 8 கிலோ வரை எடை இருந்தது. மேலும் கெண்டை, விரால், குரவை, கெளுத்தி போன்ற மீன்களும் சிக்கின.

7 வயது முதல் 70 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனர். இதில் திண்டுக்கல், மேலூர், கொட்டாம்பட்டி, திருக்கோளக்குடி, பொன்னமராவதி, திருப்பத்தூர், மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். வலையில் சிக்கிய மீன்களை பொதுமக்கள் அள்ளி உற்சாகம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்