பண்ருட்டி கெடிலத்தில் ஆற்று திருவிழா ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
பண்ருட்டி கெடிலம் ஆற்றில் ஆற்றுத்திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டத்தில் தை மாதம் 5-ந்தேதி ஆற்றுத்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதே வேளையில் கெடிலம் ஆற்றிலும் இத்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், பண்ருட்டி கெடிலம் ஆற்றில் நேற்று ஆற்றுத்திருவிழா நடைபெற்றது. இங்கு பண்ருட்டி பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்தும் சாமிகள் தீர்த்தவாரிக்காக ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு இருந்தது. இதற்கென ஆற்றில் தனியாக பந்தல் அமைக்கப்பட்டு தேவையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
சாமிகளுக்கு தீர்த்தவாரி
அதன்படி, பண்ருட்டி திருவதிகை முத்துமாரியம்மன், பண்ருட்டி கே.எஸ்.மணிநகர் அங்காளஅம்மன், மேல் அருங்குணம் ஒலக்கூர் மாரியம்மன், பக்கிரிபாளையம் செல்வமுத்துமாரியம்மன், தாழம்பட்டு முத்தாலம்மன்,
முந்துமாரியம்மன், வடபத்ரகாளி, அங்கு செட்டிப்பாளையம் முத்து மாரியம்மன், அம்மாபேட்டை கங்கையம்மன், தட்டாஞ்சாவடி ஸ்ரீ காளிஅம்மன், மாளிகம்பட்டு செவிலி முத்துமாரியம்மன், ஏ.ஆண்டிக்குப்பம் முத்துமாரியம்மன், சூரக்குப்பம் முத்துமாரியம்மன், பணிக்கன்குப்பம் முத்துமாரியம்மன், கோட்லம்பாக்கம் அருள் மாரியம்மன் ஆகிய பகுதிகளை சேர்ந்த சா மிகள் கெடிலம் ஆற்றில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து, சாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
முன்னதாக ஆற்றில் மக்கள் பொழுதுபோக்கிற்காக ராட்டினங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் மக்கள் ஏறி, மகிழ்ச்சியுடன் விழாவை கொண்டாடினர். அதேபோன்று, எண்ணற்ற கடைகளும் ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்தது.
மேலும், திருவிழாவிற்காக நகரசபை நிர்வாகம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஆற்றங்கரையில் தேவையான முன்னேற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. முன்னதாக அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேபோன்று நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் நேற்று ஆற்று திருவிழா கொண்டாடப்பட்டது.