பாலாற்றில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கரைப்பு
வேலூர் பாலாற்றில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
வேலூர் பாலாற்றில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
சிலைகள் கரைப்பு
வேலூர் மாவட்டத்தில் கடந்த 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பொதுமக்களும் பலர் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து வேலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. சிலைகள் அனைத்தும் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை டிராக்டர்களில் வைத்து சதுப்பேரி ஏரிக்கு கொண்டு சென்று கரைத்தனர்.
வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை அருகில் உள்ள கோட்டை அகழி மற்றும் அருகில் உள்ள ஆற்றுபகுதிகளுக்கு பொதுமக்கள் கொண்டு சென்று கரைத்தனர்.
தற்போது பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை காரணமாக வேலூர் பாலாற்றில் வெள்ளம் செல்கிறது. எனவே அந்த பகுதி வீடுகளில் வைத்திருந்த சிலைகளை பாலாற்றில் கரைத்தனர்.
பாலாற்றில்..
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலாற்று பாலங்களில் பொதுமக்கள் சிலைகளை கொண்டு வந்து கற்பூரம் ஏற்றி, மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் அவர்கள் அந்த சிலைகளை பாலாற்றில் தூக்கி வீசி கரைத்தனர். சிலர் பாலாற்றில் இறங்கி கரையோரம் நின்று சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதே போல வேலூர் பாலாற்றின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான சிலைகளை பொதுமக்கள் கரைத்தனர். குடும்பத்துடன் வந்தும் சிலைகளை கரைத்தனர். சிலைகளை ஆற்றில் தூக்கி வீசிய குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். இதனால் பாலாற்று பாலங்கள் பரபரப்பாக காணப்பட்டது.