பல்லடம் அருகே மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் 'புதுமைப்பெண் திட்ட' தொடக்க விழாவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
புதுமைப்பெண் தொடக்க விழா
அரசுப்பள்ளிகளில் படித்து தற்போது உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் 'புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா' நேற்று பல்லடம் அருகே அருள்புரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார்.அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
609 மாணவிகளுக்கு...
விழாவில் முதல்கட்டமாக 609 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர் கல்வி பயில மாதம் ரூ.1000-க்கான ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி பேசியதாவது:-
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 2014 பேர் பயன் பெற கண்டறியப்பட்டுள்ளனர். அதில் முதல் கட்டமாக 609 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. மாணவிகளின் வங்கி சேமிப்பு கணக்கிற்கு அந்த தொகை அரசால் செலுத்தப்பட்டுவிடும்.
தொலைநோக்கு சிந்தனையுடன்
ஒரு பெண் உயர் கல்வி கற்பதின் மூலம் அக்குடும்பமே முன்னேற்றம் அடையும் என்கிற தொலைநோக்கு சிந்தனையுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் பெண் கல்வி வளர்ச்சி அடையும், எதிர்கால சமுதாயம் மேம்பாடு அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திருப்பூர் துணை மேயர் பாலசுப்பிரமணியம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி, பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், பல்லடம் நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட சமூக நல துறை அலுவலர் அம்பிகா நன்றி கூறினார்.