'8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தவர்கள் இப்போது வேண்டும் என்கிறார்கள்' - எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தவர்கள் இப்போது அதனை வேண்டும் என்கிறார்கள்’ என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2022-12-28 21:55 GMT

பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அதிலிருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணையும் விழா நேற்று சேலம் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. இதற்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அ.தி.மு.க.வில் அவர்களை இணைத்து கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

எதிர்காலத்தில் அ.தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியாது. அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்தியாவிலேயே தார்சாலைகள் அதிகம் அமைக்கப்பட்ட மாநிலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் திகழ்ந்தது. நாம் பெற்ற பிள்ளைகளுக்கு தற்போது தி.மு.க. அரசு பெயர் வைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வந்தபோது தி.மு.க.வினர் அதை எதிர்த்தனர். தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு திருவண்ணாமலையில் போராட்டமே நடத்தினார். அவர்களது கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்த விவசாயிகளை தூண்டி விட்டார்கள். ஆனால் தற்போது 8 வழிச்சாலை திட்டம் வேண்டும் என்று அதனை எதிர்த்தவர்கள் கூறுகிறார்கள்.

நான் கொண்டு வந்தால் தவறு என்றார்கள், அவர்கள் கொண்டு வந்தால் சரி என்கிறார்கள். உலகத்தரத்திற்கு இணையாக பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி போராடி பெறப்பட்டது. ஒரு திட்டம் கொண்டு வந்தால் வேண்டும் என்றே எதிர்ப்பு தெரிவிப்பது. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிப்பது தான் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்