இலவச வீட்டுமனையில் வீடு கட்டியவர்கள் பட்டா கேட்டு வழக்கு: 20 ஆண்டுகளாக வருவாய்த்துறையினர் தாமதித்ததை ஏற்க இயலாது-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

இலவச வீட்டுமனைகளில் வீடுகட்டியவர்கள் உரிய தொகையை செலுத்துகிறோம் என்று தெரிவித்தும், 20 ஆண்டுகளாக வருவாய்த்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதித்ததை ஏற்க இயலாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Update: 2023-04-11 20:32 GMT


இலவச வீட்டுமனைகளில் வீடுகட்டியவர்கள் உரிய தொகையை செலுத்துகிறோம் என்று தெரிவித்தும், 20 ஆண்டுகளாக வருவாய்த்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதித்ததை ஏற்க இயலாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இலவச வீட்டுமனை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா, கும்பக்குடி கிராமத்தில் கடந்த 1991-ல் அரசு சார்பில் பல்வேறு நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்த மனைகளை சிலர் விற்பனை செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அந்த இலவச வீட்டு மனைப்பட்டா ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து நில நிர்வாக ஆணையரிடம் முறையிடப்பட்டது.

ஆனால் அந்த மனைகளில் பலர் கட்டிடங்களை கட்டியிருந்தனர். அந்த மனைகளில் தகுதியில்லாதவர்கள் கட்டிடம் கட்டி இருந்தால், அதற்காக சந்தை மதிப்பில் 2 மடங்கு தொகையை வசூலிக்கலாம் என நில நிர்வாக கமிஷனர் 2001-ம் ஆண்டில் உத்தரவிட்டார்.

பணம் செலுத்த தயார்

அதன்படி உரிய தொகையை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்துவதற்கு தயாராக இருந்தும், அவர்களிடம் உரிய தொகை வசூலிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களிடம் உரிய பணத்தை வசூலித்து, அந்த மனைக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஏற்கனவே நிர்ணயம் செய்த தொகைக்கு ஆண்டுதோறும் 4 சதவீத வட்டியை கணக்கிட்டு, உரிய தொகையை வசூலிக்க வேண்டும். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தாமதத்தை ஏற்க இயலாது

அவரது உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இலவச மனையில் வீடுகட்டியவர்கள் உரிய தொகை செலுத்த தயாராக இருந்தும், அவர்களிடம் பணத்தை வசூலிக்கவில்லை. இதுதொடர்பாக எந்த மேல் நடவடிக்கையையும் எடுக்காமல் பல ஆண்டுகள் தாமதம் செய்ததற்கு வருவாய்த்துறையினர்தான் பொறுப்பு.

எனவே இந்த விவகாரத்தில் 20 ஆண்டுகள் தாமதம் செய்ததை ஏற்க இயலாது. இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த தொகையையும் வருவாய்த்துறையினரிடம் வசூலிக்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டு இருக்க வேண்டும்.

நிலத்தை வாங்கியவர்களிடம் வட்டியை வசூலிப்பது தொடர்பாக தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருக்கக்கூடாது. எனவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி, சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்