அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர்-எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2022-10-08 21:44 GMT

ஓமலூர்:

ஆலோசனை கூட்டம்

ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஓமலூர் எம்.எல்.ஏ. மணி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செம்மலை, சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சித்ரா, ராஜமுத்து, நல்லதம்பி, ஜெய்சங்கரன், சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் நமது கூட்டணி சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த மிகப்பெரிய வெற்றிக்காக சிறப்பாக பணியாற்றினீர்கள். குடும்ப ஆட்சி தி.மு.க.வை நாம் அடியோடு ஓரம் கட்ட வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக நமது ஆட்சி இருந்தது.

பொதுக்கூட்டங்கள்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது நமது அரசு. அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொண்டு வந்து, அதன் மூலம் ஏழை, எளியவர்களுக்கு சிறப்பான சிகிச்சையை வழங்கினோம். ஆனால் தற்போதுள்ள தி.மு.க. அரசு மினி கிளினிக்குகளை மூடிவிட்டது. எந்த அரசு வந்தாலும், நாம் செய்த சாதனைகளை முறியடிக்க முடியாது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழி வந்த அ.தி.மு.க. கட்சி தொடங்கி 50 ஆண்டுகள் முடிந்து, 51-வது ஆண்டு தொடங்க உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டங்களில் தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம், சொத்து வரி மற்றும் விலைவாசி உயர்வு குறித்தும், நமது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் விளக்க வேண்டும்.

தீய சக்திகள்

கடந்த சட்டசபை தேர்தலின் போது சில தீய சக்திகள் நம்மோடு இருந்து கொண்டு, நம்மை நம்ப வைத்து கழுத்தை அறுத்தார்கள். அதனால் தான் நாம் தோற்று போனோம். இல்லை என்றால் ஆட்சியை பிடித்திருப்போம். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்பட்டு விட்டனர். அவர்கள் தற்போது ஒன்று சேர்ந்து சதி திட்டம் தீட்டி வருகிறார்கள்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் நம்மிடம் தான் உள்ளனர். நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தில் 2024-ல் ஆட்சி முடியும் நிலை உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். நம்பிக்கையோடு பணியாற்றினால், நாளை நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ராஜேந்திரன், அசோகன், கோவிந்தராஜ், சேரன் செங்குட்டுவன், சுப்ரமணியம், மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்