தமிழின படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்

தமிழின படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என தஞ்சையில் பழ.நெடுமாறன் கூறினார்

Update: 2023-05-18 20:45 GMT

தமிழின படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என தஞ்சையில் பழ.நெடுமாறன் கூறினார்.

நினைவஞ்சலி

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் 1½ லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தஞ்சை விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு நேற்று மாலை 14-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்கு ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தண்டிக்கப்பட வேண்டும்

திட்டமிடப்பட்டு படுகொலைக்கு ஆளான மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்து 14 ஆண்டுகளை கடந்து விட்டது. இன்னும் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை உலக நாடுகள் கண்டிக்க முன்வரவில்லை. இலங்கையில் வாழும் சிங்கள மக்கள், இனப்படுகொலை செய்தவர்களை நாட்டை விட்டே விரட்டி விட்டனர். சிங்கள மக்களுக்கு இருந்த உணர்வு உலக நாடுகளுக்கு வரவில்லை.

இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் எங்கே இருந்தாலும் அவர்கள் சர்வதேச கோர்ட்டின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு இந்தியா முன்நிற்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உலக வரலாற்றில் இல்லாத அளவில் 26 பேருக்கு தடா கோர்ட்டு தூக்கு தண்டனை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு 19 பேரை விடுதலை செய்தது. 7 பேர் சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்ய வேண்டும்

இவர்களில் ஈழத்தமிழர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறையில் வைத்து இருப்பது நியாயமற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைப்பது என்னவென்றால் தயவு செய்து அவர்கள் 4 பேரையும் சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஏற்கனவே 19 பேரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்த பிறகு 8 பேர் ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனர். அப்போது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தோம். உடனே அந்த ஆணையத்தின்படி 8 பேர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்