கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் -அண்ணாமலை அறிக்கை

கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-23 21:42 GMT

சென்னை,

கோவை நகரில் உக்கடத்தில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததாக செய்தி அனைவரும் கண்டிருப்பீர்கள். இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீஸ் உயர் அதிகாரிகள் கார் சிலிண்டர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து தங்களுடைய முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்கள். இது ஒரு விபத்து, குண்டுவெடிப்பு என்று இதுவரை சொல்லவில்லை. ஆனால் கோவை நகரில் அனைத்து இடங்களிலும் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் நடந்ததை சிலிண்டர் விபத்தாக கருதி எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.

தேசிய பாதுகாப்பு முகமை

கடந்த ஒரு மாதத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை நமது மத்திய அரசு தடை செய்தபின், தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கட்சி அலுவலகம், கடை, வீடுகளை குறி வைத்து 19 இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.

இன்றைக்கு நடந்த சம்பவம் மக்கள் நடமாடும் நேரத்தில் நடந்திருந்தால் எப்பேர்ப்பட்ட உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். இறைவன் அருளால் மட்டுமே மக்கள் இன்று பிழைத்துக் கொண்டனர். கார் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் பெயரை போலீசார் வெளியிட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஜமேசா முபீன் என்பவராகும்.

போலீஸ் வட்டாரங்களில் கார் வந்த சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தபின் வேகத்தடையினால் கார் கட்டுப்பாட்டை இழந்து குண்டுவெடிப்பு ஏற்படுத்துவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்ததாகவும், சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்கள் குண்டுவெடிப்பையே சுட்டிக்காட்டுவதாகவும் பேசப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைதுசெய்யவேண்டும் என்பது தமிழக பா.ஜ.க.வின் கோரிக்கை ஆகும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்