தூத்துக்குடி எலக்ட்ரீசியன் கொலை: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கோர்ட்டில் சரண்
தூத்துக்குடி எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
தூத்துக்குடியில் எலக்ட்ரீசியன் கொலையில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க தூத்துக்குடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எலக்ட்ரீசியன் கொலை
தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் (வயது 60). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் பாரதிநகர் பகுதியில் வந்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பெரியநாயகத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், இறந்த பெரியநாயகம் ராஜகோபால்நகர் பகுதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் ஒயரிங் செய்து கொடுத்து இருந்தாராம். இந்த நிலையில் கடையில் பணியாற்றிய பாலமுருகன் என்பவர் சுவிட்சை போட்ட போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதனால் பெரியநாயகம் சரிவர ஒயரிங் செய்யாததால் பாலமுருகன் இறந்ததாக, அவரது உறவினர் பழனிகுமார் மற்றும் நண்பர்கள் கருதினர். இதன் காரணமாக அவர்கள் பெரியநாயகத்தை வெட்டிக் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பழனிகுமாரை தேடி வந்தனர்.
சரண்
நேற்று மாலையில் பழனிகுமார் மற்றும் 17, 18 வயது சிறுவர்கள் 2 பேர், கொலை வழக்கில் ஈடுபட்டதாக மதுரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை சிப்காட் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.