திருமூர்த்தி அணையின் கரைப்பகுதியில் குவியும் குப்பைகள்

Update: 2022-10-26 15:58 GMT


திருமூர்த்தி அணையின் கரைப்பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சுற்றுலாத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கு்பைகளை அகற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமூர்த்தி அணை பகுதி

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மற்றும் பிஏபி தொகுப்பு அணைகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர் வரத்தை அளித்து வருகிறது.

அதை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அது தவிர சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, கணக்கம்பாளையம், பூலாங்கிணர், மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

படகு இல்லம், நீச்சல் குளம்

திருமூர்த்தி மலைப்பகுதியில் நிலவுகின்ற சீதோஷண நிலை மற்றும் இயற்கை அழகை ரசிக்கவும் புகைப்படம் எடுத்து மகிழவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர். பின்னர் பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்து மகிழ்வதுடன் அடிவாரப் பகுதிக்கு வந்து மும்மூர்த்திகளையும் சாமி தரிசனம் செய்கின்றனர்.

அதைத் தொடர்ந்து படகு இல்லம், நீச்சல் குளம், வண்ண மீன் காட்சியகம் உள்ளிட்ட பார்வையிட்ட பின்பு அணைப்பகுதிக்கு வருகை தருகின்றனர். அங்கு அணையின் மேற்கு பகுதியில் உபரிநீர் வெளியேற்றப்படும் ஷட்டர்களுக்கு அருகில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் குப்பைகள்

அந்த கடைகளில் இருந்து உணவு மற்றும் தின்படங்கள் பொட்டலங்களை வாங்கிச் செல்லும் சுற்றுலா பயணிகள் அணைப்பகுதியில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். பின்னர் பாலித்தீன்கவர்கள், பிளாஸ்டிக் கேன்கள், டம்ளர்கள் மற்றும் காகிதங்களை அணைப்பகுதியில் வீசி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் குடிநீர் மாசு அடையும் சூழல் ஏற்பட்டு உள்ளதுடன் அணைக்கு தாகம் தீர்க்க வருகின்ற வனவிலங்குகளின் உயிருக்கும் ஆபத்து நேரிடும் சூழல் நிலவுகிறது. அணைக்கு அருகே கடை அமைத்துள்ள வியாபாரிகள் சுயநல நோக்கோடு செயல்படுவதால் அணைப்பகுதி குப்பை தொட்டியாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

எனவே திருமூர்த்திஅணை பகுதியில் சம்பந்தப்பட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அங்குள்ளகுப்பைகளை அகற்றியும் இனிமேற்கொண்டு குப்பைகள் தேங்காமல் நடவடிக்கை எடுப்பதுடன் சாலையோரத்தில் சுற்றுச் சூழலுக்கும் குடிநீருக்கும் மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்ற தள்ளு வண்டிக் கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்