திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி
மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாவடுதுறை அதீனம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தை 14-ம் நூற்றாண்டில் தோற்றுவித்த ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் நமச்சிவாய மூர்த்திகள் மகரதலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பூஜை கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது.
விழாவின் 10-ம் நாளான நேற்று முன்தினம் மகேஸ்வர பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதைத்தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, நமசிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
பட்டின பிரவேசம்
முன்னதாக சமய பணியாற்றிய 10 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் வழங்கினார். தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம், தங்க பாதரட்சை அணிந்து பட்டின பிரவேசத்துக்காக பல்லக்கில் சென்றார்.
அப்போது வீதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு பூரண கும்ப மரியாதையுடன் ஆதீனத்துக்கு வரவேற்பு அளித்து தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.