திருத்தணி, சிறுவாபுரி முருகன் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு திருத்தணி, சிறுவாபுரி முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-04 21:54 GMT

சிறுவாபுரி,

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் பங்குனி உத்திரம் விழா என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

இதையொட்டி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனால், பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆனால், போதிய அளவு போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருத்தணி கோவில்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன்கோவிலில் நேற்று பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு நகரத்தார் திருத்தணி பாத யாத்திரை குழுவை சேர்ந்த பக்தர்கள் மயில்காவடிகள் எடுத்தும், பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்தில் இருந்து படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். பின் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் பால்குட அபிஷேகம் நடந்தது.

பின்பு மதியம் 1 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மூலவரை 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்