திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் கார்கள் பழுதடைந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கொட்டித்தீர்த்த மழை
திருப்பூர் மாநகரில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை வெயில் அடித்தாலும் மதியம் 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பிறகு தூறலுடன் மழை பெய்யத்தொடங்கியது. குறிப்பாக திருப்பூர் புதிய பஸ் நிலையம், அனுப்பர்பாளையம், பிச்சம்பாளையம், மண்ணரை, குமரன் ரோடு சுற்றுப்புற பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் மழை நீடித்தது. இதன்காரணமாக தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.
காந்திநகர் அண்ணாபூர்ணா லே அவுட் 1-வது வீதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்கு முன்புறம் மழைநீர் தேங்கியது. வடிகால் வசதி சரிவர இல்லாததால் அந்த வீதிகளில் மழைநீர் தேங்கி கடும் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
கார்கள் பழுது
நெசவாளர் காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் அதிகம் தேங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையால் தேங்கிய மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் பாதிப்பு இல்லை. பிச்சம்பாளையம் புதூர் நால்ரோட்டில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலத்துக்கு கீழ் அதிகமாக தண்ணீர் தேங்கியது.
அதுபோல் ஸ்ரீசக்தி தியேட்டர் முன் மழைநீர் பெருக்கெடுத்து பாய்ந்தது. சாலை மிகவும் தாழ்வாக இருந்ததால் நொய்யல் ஆற்றை நோக்கி மழைநீர் வேகமாக ஓடியது. கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையில் ஸ்ரீசக்தி தியேட்டர் முன்புறம் உள்ள சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்தது. நேற்றும் அந்த வழியாக முழங்கால் அளவுக்கு தண்ணீர் பாய்ந்ததால் அந்த வழியாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. மழைநீரை கடந்தபோது 3 கார்கள் பழுதடைந்து நடுவழியில் நின்றது. காருக்குள் இருந்தவர்கள் வெளியேறி தண்ணீரில் தத்தளித்தபடி நடந்து வெளியே வந்தனர்.
அதன்பிறகு அருகில் இருந்தவர்கள் தள்ளியபடி காரை வெளியே கொண்டு வந்தனர். இதுபோல் இருசக்கர வாகனங்களில் வந்த பெண்கள் தண்ணீரை கடக்க முடியாமல் நடுவழியில் வாகனம் பழுதடைந்து நின்றது. அங்கிருந்த இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதை பார்த்ததும் கார்களில் வந்தவர்கள் சாலையை கடக்காமல் திரும்பி சென்றார்கள்.
பாலத்தில் மேல்பகுதியில் மழைநீர்
ஈஸ்வரன் கோவில் செல்லும் நொய்யல் ஆற்றின் மேல் பகுதியில் மழைநீர் பாய்ந்தது. அந்த வழியாக வந்த 2 ஆட்டோக்கள் சிக்கியது. பின்னர் அங்கிருந்தவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். திருப்பூர் வடக்கு பகுதியில் மழை கொட்டித்தீர்த்தது. ஆனால் தெற்கு பகுதியில் மழை பொழிவு குறைவாகவே காணப்பட்டது.
---------------