திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Update: 2023-09-20 17:14 GMT


திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து ெகாண்டார்.

திருமூர்த்தி அணை

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசன வசதி பெறுகிறது. இதற்காக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி வாய்க்கால் மூலமாக 2 ஆயிரத்து 786 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகிறது.

கடந்த 1-ந்தேதி பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு உயர்ந்தது. இதையடுத்து 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தண்ணீர் திறப்பு

அதன் பேரில் அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து 4-ம் மண்டல பாசனத்தில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் நேற்று முதல் அடுத்த மாதம் 11-ந்தேதி வரை 21 நாட்களுக்குள் ஒரு சுற்றுக்கு 2 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவு பிறப்பித்தது. அதேபோன்று பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு நேற்று முதல் வருகின்ற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை ஒரு நிரப்பிற்கு 250 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து நேற்றுகாலை அணையில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் விவசாயிகளுடன் இணைந்து பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார். இதையடுத்து மதகுகள் வழியாக தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆலோசனை கூட்டம்

அதைத்தொடர்ந்து தண்ணீர் திருட்டை தடுப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் காண்டூர் கால்வாய் அருகில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் பாசன சங்க தலைவர்கள் தண்ணீர் திருட்டை தடுக்கக்கோரி அதிகாரிகளை வலியுறுத்தினார்கள். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு தலைமைப்பொறியாளர் பாண்டி, செயற்பொறியாளர்கள் மகேந்திரன், காஞ்சித்துரை, உதவி செயற் பொறியாளர்கள் ஆதிசிவன், பாபு சபரீஸ்வரன், சக்திகுமார், ஆனந்த பாலதண்டபாணி, அசோக்பாபு, உதவி பொறியாளர்கள் மாரிமுத்து, ஜெயக்குமார், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்