சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு
30 நாட்களாக தொடரும் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்தார்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்தும், பணிநீக்கம் செய்த ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் அந்த ஊழியர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களும் கடந்த 1-ந்தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30-வது நாளாக தொடர்ந்து நடைபெறும் இந்த போராட்டத்திற்கு நேற்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேரில் வருகை தந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், சுங்கச்சாவடி ஊழியர்களின் பிரச்சினை குறித்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரியிடம் பேசி தீர்வு காண முயற்சிப்பதாகவும், அப்படியும் தீர்வு ஏற்படவில்லையெனில் அனைத்து கட்சியினரை திரட்டி சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.