மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் திருக்கல்யாணம்
பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழாவையொட்டி மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
குத்தாலம்:
பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழாவையொட்டி மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மார்க்க சகாயசாமி கோவில்
மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் தேவாரப்பாடல் பெற்ற மங்கள சவுந்தரநாயகி சமேத மார்க்க சகாயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனை சவுந்தர்யநாயகி அம்மன் திருக்கல்யாணம் புரிந்த தளமாக விளங்கி வருகிறது.
மேலும் இத்தளத்தில் எழுந்தருளியுள்ள மார்க்க சகாயசாமியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் வழிபட்ட தளமாகவும் இது விளங்கி வருகிறது. இந்த கோவிலில் சுவாமிக்கு வில்வ அர்ச்சனை செய்து அந்த வில்வத்தை தண்ணீரில் விட்டு பருகினால் இதய நோய் தீரும் என்பது ஐதீகம்.
திருக்கல்யாணம்
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா கடந்த மார்ச் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் நாள் நிகழ்ச்சியான சகோபுர தரிசனம் எனும் சப்பரத் திருவிழா கடந்த 30-ம் தேதி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் நாள் திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக மார்க்க சகாயசாமி வெண்பட்டு உடுத்தி சௌந்தரநாயகி அம்பாள் சிகப்பு பட்டு உடுத்தி திருஆபரணங்கள் அணிந்து கோவில் வெளி பிரகாரத்தில் எழுந்தருளி சீர்வரிசைகளுடன் திருமண மேடைக்கு வந்தனர். பின்னர் ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல், கன்னிகாதானம் எனப்படும் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பின்னர் பூர்ணாகுதி செய்யப்பட்டு அலங்கார தீபம் உள்ளிட்ட 16 வகையான சோடச தீபாராதனையுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த திருக்கல்யாணத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். மேலும் வருகின்ற 3-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.