திருப்பரங்குன்றத்தில் இன்று திருக்கல்யாண உற்சவம்
திருப்பரங்குன்றத்தில் இன்று(சனிக்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருவிழாவையொட்டி நேற்று நடந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் இன்று(சனிக்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருவிழாவையொட்டி நேற்று நடந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பட்டாபிஷேகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சிகளாக கடந்த 1-ந்தேதி கைப்பாரமும், 5-ந் தேதி பங்குனி உத்திரமும், 6-ந்தேதி சூரசம்ஹார லீலையும், நடந்தது.
திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி இரவு 7.45 மணிக்கு கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற யாகசாலையில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டது.மேலும் அங்கு அக்கினி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானின் சிரசில் தங்ககீரிடமும், சேவல் கொடியும் சாற்றப்பட்டது. மேலும் திருக்கரத்தில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் வழங்கி கோலாகலமாக நடந்தது.அவை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பக்தர்கள் முருகப்பெருமானின் பட்டாபிஷேகம் கண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்
திருக்கல்யாணம்
திருவிழாவின் முத்தாய்ப்பாக இன்று பகல் 12.20 மணியில் இருந்து 12.40 மணியளவில் கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, முருகப்பெருமான்.தெய்வானைக்கு மங்கல நாண் சூடும் திருக்கல்யாண வைபோகம் நடக்கிறது. இதனையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளுகின்றனர். முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலையில் இருந்து பட்டு வேட்டி, பட்டு துண்டு, பட்டு சேலை பூமாலைகள் மற்றும் பழங்கள். பலகாரங்கள் என்று சீர்வரிசை வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை 9-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.