நூல் விலையை நிர்ணயம் செய்ய முத்தரப்பு குழுவை அமைக்க வேண்டும்

Update: 2023-09-05 16:40 GMT


திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்க நூல் விலையை நிர்ணயம் செய்ய முத்தரப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று சைமா சங்கம் வலியுறுத்தியது.

நூல் விலை

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூரின் பாரம்பரியமிக்க பின்னலாடைத் தொழில் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்து கேள்விக்குறியாய் நிற்கிறது. முந்தைய காலக்கட்டத்தில், நூற்பாலை உரிமையாளர்கள் மாதம் ஒருமுறை தங்களுடைய நூல் விலையை நிர்ணயித்து வந்தார்கள்.

ஆனால் தற்போது நூற்பாலைகளால் 15 நாட்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பிட்ட சில நூற்பாலைகள் வாரம் ஒரு முறை நூல் விலையை நிர்ணயம் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் உற்பத்தி சூழ்நிலையில் நூல் கொள்முதல் செய்து அதனை ஆடையாக மாற்றுவதற்கு குறைந்தபட்சம் 2 மாதங்களும், சரக்கு இருப்புக்காக ஒரு மாதமும் என குறைந்தபட்சம் 3 மாதங்கள் கழித்துதான் அதை விற்பனைக்கு கொண்டு செல்ல முடிகிறது.

முத்தரப்பு குழு

3 மாதங்களில் 3 முறை நூல் விலை மாற்றம் ஏற்படுவதால், பெரும் சிரமம் ஏற்படுகிறது. விலை அதிகரிக்கும் போது மொத்த விற்பனையாளர்கள் பழைய விலைக்கு தருமாறு நிர்பந்தம் செய்கின்றனர். விலை குறையும் போது கொள்முதல் செய்வதை தவிர்க்கிறார்கள். எனவே அடிக்கடி மாற்றம் செய்கின்ற நூல் விலையினை குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான், விலை நிர்ணயம் செய்வதில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

நூற்பாலை உரிமையாளர்கள் சங்கம், பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம், பஞ்சு விற்பனையாளர்கள் என்ற ஒரு முத்தரப்பு குழுவினை அமைத்து குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நூல் விலை சீராக இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் பல லட்சம் பி்ன்னலாடை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், பின்னலாடை உற்பத்தியாளர்களின் சிரமங்கள் குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

----

மேலும் செய்திகள்