ஆன்மிகத்தை அரசியலாக்க நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது

ஆன்மிகத்தை அரசியலாக்க நினைப்பது எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-12 17:00 GMT

நாகர்கோவில்:

ஆன்மிகத்தை அரசியலாக்க நினைப்பது எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.50 கோடிக்கு மேல் அறநிலையத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புராதன கோவில்களுக்கு கும்பாபிஷேக விழா மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை மிக நேர்த்தியாக ஆன்மிக மக்களோடு சேர்ந்து நாங்கள் நடத்துகிறோம். அதனை சில தரப்பினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அரசியல் உள்நோக்கம்

என்னை பொறுத்தவரை அரசியலையும், ஆன்மிகத்தையும் நாம் கலக்கக்கூடாது. இரண்டையும் தனித்தனியாகவே பார்க்க வேண்டும். ஆன்மிகத்தை அரசியல் ஆக்க நினைப்பது ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல். அது யார் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் எந்த கோவில் நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்கள் கலந்து கொள்வது தொடர்ந்து நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது. அப்படி இருக்கையில் ஒரு அமைச்சரை உள்ளே வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று சிலர் இந்த முயற்சி மேற்கொண்டாலும் அது பலிக்காது. தி.மு.க. எந்த ஆன்மிக உணர்வுக்கும் எதிரான கட்சி அல்ல. மதவெறி சார்ந்த செயல்களை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். குமரி மாவட்டம் ஆன்மிக தலம். இங்குள்ள மக்களுக்கு ஆன்மிக உணர்வுகள் இருக்கிறதே தவிர மதவெறி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்