திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் கன்டெய்னர் லாரி பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் இருசக்கர வாகனங்கள், கார், பஸ், லாரி, சரக்கு வேன் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
தமிழகம்-கர்நாடகம் இடையே முக்கிய போக்குவரத்தாக இந்த பாதை உள்ளது. குறுகிய வளைவுகளை கொண்டதால் திம்பம் மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பழுதாகியும், சில நேரங்களில் கவிழ்ந்தும் விபத்து ஏற்படுகிறது. இதனால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
லாரி பழுது
இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து கோவைக்கு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. காலை 8 மணி அளவில் 27-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் மலைப்பாதை வழியாக கார், இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. பஸ், லாரி, சரக்கு வாகனம் போன்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. இதனால் அவை ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரி பழுது பார்க்கும் பணி நடந்தது. பகல் 11 மணி அளவில் பழுது நீக்கப்பட்டு லாரி அங்கிருந்து சென்றது. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீரானது. அனைத்து வாகனங்களும் சென்றன. லாரி பழுதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.