பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி மதனபுரி டவுன் பகுதியில் கடந்த 24-ந் தேதி அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 2½ பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் திருட்டுப்போனது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் நேற்று காரணம்பேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிவகங்கையை சேர்ந்த சித்திரை சாமி மகன் ஆகாஷ் (வயது 22) மற்றும் ஆடிய ராஜா மகன் பொன்னையா (25) என்பதும் இவர்கள் 2 பேரும் மதனபுரி டவுன்பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரம், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.