திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து
திருப்பூர் எஸ்.வி.காலனி 8-வது வீதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (வயது 43). இவர் அப்பகுதியில் சொந்தமாக பனியன் நிறுவனத்துக்கான அட்டை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கார்த்தீஸ்வரன் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான விருதுநகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக கார்த்தீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
இதில் வீட்டுக்குள் அலமாரியில் கார்த்தீஸ்வரன், தான் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை கழற்றி வைத்து விட்டு ஊருக்கு சென்றதாக கூறியுள்ளார். அந்த நகையை காணவில்லை. அவற்றை மர்ம ஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது.
கார்த்தீஸ்வரன் திருப்பூர் வந்த பிறகே வேறு நகை எதுவும் திருட்டு போனதா? என்பது குறித்து தெரியவரும். இதுகுறித்து வடக்கு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த திருட்டு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.