திருடிய நகை, பணத்தில் பெண்களுடன் ஜாலியாக இருந்த கொள்ளையன்
கொள்ளையடித்த பணத்தில் கொத்தனார் பெண்களிடம் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவர் ஊட்டியில் நிலம் வாங்கியதும் அம்பலமானது.
நாகா்கோவில்:
கொள்ளையடித்த பணத்தில் கொத்தனார் பெண்களிடம் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவர் ஊட்டியில் நிலம் வாங்கியதும் அம்பலமானது.
வீட்டில் திருட்டு
நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34), நகை மதிப்பீட்டாளர். இவருடைய மனைவி பார்வதி (23). சம்பவத்தன்று கார்த்திக் வேலை விஷயமாக சென்னைக்கு சென்றார். இதனால் அவரது மனைவி பார்வதி தனது தாயார் வீட்டுக்கு சென்று தங்கினார். பின்னர் கடந்த 21-ந் தேதி கார்த்திக் வீட்டுக்கு வந்த போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் பீரோவில் இருந்த 17 பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்மஆசாமி உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதுபற்றி வடசேரி போலீசில் கார்த்திக் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொத்தனார் கைது
முதலில் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ஒரு வாலிபர் வீட்டின் மாடி வழியாக உள்ளே செல்வதும், சிறிது நேரத்திற்கு பிறகு மாடி வழியாக இறங்கி தப்பிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அதில் கொள்ளையனின் உருவமும் பதிவாகி இருந்தது.
அந்த உருவத்தை வைத்து தீவிர விசாரணை நடத்தியதில், நாகர்கோவில் வாத்தியார்விளையை சேர்ந்த ஆனந்த் (34), என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் 23-ந் தேதியன்று இரவு வடசேரி பஸ் நிலையத்தில் வைத்து அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
பெண்களுடன் உல்லாச வாழ்க்கை
கைதான ஆனந்த் மீது ஏற்கனவே வடசேரி போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் உள்ளன. கொத்தனார் வேலைக்கு செல்லும் ஆனந்த் இடை இடையே திருட்டு தொழிலையும் அரங்கேற்றியுள்ளார்.
கொள்ளையடித்த பணத்தில் ஜாலியாக ஊர் சுற்றியதோடு பெண்களுடன் உல்லாச வாழ்க்கையிலும் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஊட்டியில் அவர் நிலம் வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைதான ஆனந்திடம் இருந்து 17 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.
குமரி மாவட்டம் மட்டுமின்றி வேறு மாவட்டங்களிலும் ஆனந்த் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.